'சுவரில் துளை; பலகோடி ரூபாய் நகைகள் மாயம்!' - திருச்சியை அதிர வைத்த கொள்ளை

Oct 02, 2019

திருச்சி லலிதா ஜுவல்லரியின் பின்புற சுவரில் துளையிட்டு பலகோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.


திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே லலிதா ஜுவல்லர்ஸ் நகைக் கடை செயல்பட்டு வருகிறது. இன்று காந்தி ஜயந்தி விடுமுறை என்பதால் வாடிக்கையாளர்கள் அதிகம் வர வாய்ப்பு உள்ளது. இதனால், பணியாளர்கள் முன்னதாகவே வந்து கடையைத் திறந்தனர்.

அப்போது லலிதா ஜுவல்லரியின் பின்பக்க சுவரில் பெரிய ஓட்டை இருந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த நகைக் கடை பணியாளர்கள் திருச்சி கோட்டை காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைக்க போலீஸார் விரைந்து வந்தனர்.

போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில், மூன்று அடுக்குமாடி கட்டடத்தில் கொண்ட லலிதா ஜுவல்லர்ஸ் நகைக் கடையில் கீழ் தளம் மற்றும் மேல் தளத்தில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இந்நிறுவனம், அருகில் உள்ள தனியார் சுயநிதி கலை அறிவியல் கல்லூரி மைதானத்தின் ஒரு பகுதியைக் குத்தகைக்கு எடுத்து அதில் இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் உள்ளிட்டவை நிறுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அந்த மைதானத்தின் வழியாகப் பக்கவாட்டு சுவரில் கொள்ளையர்கள் நேற்றிரவு நகைக் கடையின் சுவரைத் துளையிட்டு உள்ளே சென்று, பாதுகாப்பாக வைத்திருந்த கோடிக்கணக்கில் மதிப்புடைய நகைகள் கொள்ளைபோனது தெரியவந்துள்ளது. முன்னதாகக் காலை 8 மணி அளவில் லலிதா ஜூவல்லரி பணியாளர்கள் பதற்றமாகக் காணப்பட அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீஸார் சம்பவம் குறித்து விசாரித்திருக்கிறார்கள். அப்போது பணியாளர்கள்,`வெறும் அட்டை பெட்டி மட்டும்தான் இருக்கு. கடையில் இருந்த மொத்த நகையையும் கொள்ளையடித்துச் சென்றுவிட்டார்கள்' என போலீஸாரிடம் பணியாளர்கள் கூறியதாகவும் கூறப்படுகிறது.

தொடர்ந்து போலீஸார் மோப்ப நாய் மற்றும் தடய அறிவியல் துறை வல்லுநர்களை வரவழைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில், தகவலறிந்த திருச்சி மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் மற்றும் துணை ஆணையர்கள் மயில்வாகனன், நிஷா, திருச்சி மாவட்ட எஸ்.பி ஜியா உல்ஹக் உள்ளிட்ட போலீஸார் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து விசாரித்து வருகிறார்கள்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருச்சி நம்பர் 1 டோல்கேட் அருகே செயல்பட்டு வந்த தனியார் வங்கியின் சுவரைக் குடைந்து, வங்கி லாக்கரில் வைக்கப்பட்டிருந்த பல கோடி மதிப்பிலான நகைகளைக் கொள்ளையடித்தார்கள். அந்தச் சம்பவத்தில் நகைக் கொள்ளை குறித்து இதுவரை எவ்வித தடயமும் கிடைக்கவில்லை. இதனால் திருச்சி மாவட்ட போலீஸார் தவித்து வந்த நிலையில், இப்போது லலிதா ஜுவல்லர்ஸ் நகைக்கடையில் பல கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



https://www.vikatan.com/social-affairs/crime/robbery-in-trichy-lalitha-jwellery