பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரை உருக்குலைத்த நிலநடுக்கம்.. 25 பேர் பலி.. 400க்கும் மேற்பட்டோர் படுகாயம்

Sep 28, 2019

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானை மையமாக கொண்டு நேற்று மாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால், பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் அதிக பாதிப்பை சந்தித்துள்ளது. சுமார் 25 பேர் அங்கு பலியாகியுள்ளனர். 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மையமாக கொண்டு நேற்று மாலை 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, இதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட குறைந்தது 25 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 400 பேர் காயமடைந்தனர், அவர்களில் பலர் பலத்த காயமடைந்தனர் என்று பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலநடுக்கம் ஜீலம் நதிக்கு வடக்கே 22.3 கிலோமீட்டர் தொலைவில், பஞ்சாப் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் ஆகியவற்றைப் பிரிக்கும் எல்லையில் மையம் கொண்டிருந்ததாக, அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

"நிலநடுக்கம் 10 கி.மீ பரப்புக்கு மையம் கொண்டிருந்தது. பஞ்சாபின் பெரும்பாலான பகுதிகளிலும் கைபர் பக்துன்க்வாவின் சில பகுதிகளிலும் இது உணரப்பட்டது. இருப்பினும், மிக மோசமான பாதிப்பு காஷ்மீரின் (ஆக்கிரமிப்பு) மீர்பூர் மாவட்டத்தில்தான் "என்று பாகிஸ்தானின் தலைமை வானிலை ஆய்வாளர் முகமது ரியாஸ் தெரிவித்துள்ளார்.

ஜீலம் நதியின் அருகே பூகம்பத்தின் மையப்பகுதி இருந்ததால், அது ஜட்லான் மற்றும் காரி ஷெரீப் நடுவேயான பகுதிகளில், பேரழிவை ஏற்படுத்தியதாகவும், நூற்றுக்கணக்கான வீடுகள், வாகனங்கள் மற்றும் பிற உள்கட்டமைப்புகளை சேதமடைந்துள்ளதாகவும் மிர்பூர் பிரதேச ஆணையாளர் முகமது தயாப் தெரிவித்தார்.

மிர்பூரில் உள்ள தலைமையக மருத்துவமனைக்கு செல்லும் வழியில் அல்லது 12 பேர் இறந்துவிட்டதாக அவர் கூறினார், அதே நேரத்தில் 13 பேர் ஜட்லான் மற்றும் காரி ஷெரீப் இடையே வெவ்வேறு கிராமங்களில் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த 150 பேர் டி.எச்.க்யூ மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்கள். பலர் மேல் சிகிச்சைக்காக, ராவல்பிண்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கிராமப்புறங்களில் மொபைல் போன், தொலைபேசி சேவை மற்றும் மின்சாரம் வழங்குவது துண்டிக்கப்பட்டது. இதன் காரணமாக மக்கள் தங்கள் அருகிலுள்ளவர்களுக்கு தகவல் கொடுக்கவோ, உதவி பெறவோ முடியவில்லை.


https://tamil.oneindia.com/news/international/about-25-people-have-died-after-earthquake-rocks-north-pakistan-363884.html